டொரன்ரோவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 3 பெண்களைத் தேடும் பொலிஸ்.
டொரன்ரோவின் நகரப் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூன்று பெண்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அக்டோபர் 26ஆம் திகதி மாலையில், Bay மற்றும் Front வீதிகள் சந்திப்புக்கு அருகாமையில் வைத்து நபர் ஒருவரை இந்த மூன்று பெண்களும் அணுகியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, அவர்கள் குறித்த நபரைத் தாக்கி, அவரது கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றுள்ளனர். சம்பவத்தின் பின்னர் மூவரும் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவரான, கியூபெக்கின் லாவல் பகுதியைச் சேர்ந்த 33 வயதான செலின் செய்னல்வாண்ட் (Celine Zeynalvand) என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கொள்ளைக் குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வருகிறார்.
ஏனைய அடையாளம் தெரியாத இரண்டு பெண் சந்தேகநபர்களும் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என நம்பப்படுகிறது. அவர்களில் ஒருவர் வெளிர் மஞ்சள் நிற முடியும், கறுப்பு நிற விளையாட்டு மேலாடை மற்றும் லெக்கிங்ஸும் அணிந்திருந்தார். மற்றையவர் பழுப்பு நிற முடியும், அடர் நீல நிற விளையாட்டு மேலாடை மற்றும் லெக்கிங்ஸும் அணிந்திருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.

