1965 ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருந்தபோது, சீனாவின் ஏவுகணை சோதனைகளை கண்காணிக்க, சிஐஏ மற்றும் இந்திய மலையேறுபவர்கள் குழு நந்தா தேவி சிகரத்தில் அணுசக்தி மூலம் இயங்கும் உளவு சாதனத்தை நிறுவ திட்டமிட்டது. இந்த சாதனத்தில் நாகசாகி குண்டில் பயன்படுத்தப்பட்ட புளூட்டோனியத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமான கதிரியக்க புளூட்டோனியம் இருந்தது.
மலையேற்றத்தின்போது ஏற்பட்ட கடுமையான பனிப்புயலால், இந்திய அதிகாரி கேப்டன் எம்.எஸ். கோஹ்லியின் உத்தரவின் பேரில், மலையேறுபவர்கள் அந்த அணுசாதனத்தை கேம்ப் ஃபோருக்கு அருகில் உள்ள ஒரு பனிப்பாறையின் விளிம்பில் மறைத்து வைத்துவிட்டு, அவசரமாக கீழே இறங்கினர்.
அடுத்த ஆண்டு சாதனத்தை மீட்க சென்றபோது, அது மறைந்து போயிருந்தது. பனிச்சரிவு அல்லது புளூட்டோனியத்தின் வெப்பத்தால் பனி உருகியதன் காரணமாக அது ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த ரகசியம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தபோது, இந்தியாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. “சிஐஏ எங்கள் தண்ணீருக்கு நஞ்சூட்டுகிறது” என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். அன்றைய அதிபர் ஜிம்மி கார்ட்டர் மற்றும் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆகியோர் இந்த விவகாரத்தை மூடிமறைக்க ரகசியமாக செயல்பட்டனர்.
கேப்டன் கோஹ்லி, தனது இறப்புக்கு முன், சிஐஏவின் இந்த முட்டாள்தனமான திட்டத்தில் சிக்கியது தன் வாழ்க்கையின் வருத்தமான அத்தியாயம் என்று குறிப்பிட்டிருந்தார்.

