ஐதராபாத்தில் நடைபெற்ற ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை நிதி அகர்வால், ரசிகர்களின் அநாகரீகமான அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லுலு மாலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விழா முடிந்து அவர் வெளியேற முயன்றபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டை மீறி, செல்ஃபி எடுக்க முயன்ற கும்பல் அவரை பிடித்து இழுத்து தள்ளியது. இதில் நிலைதடுமாறிய நிதி அகர்வால், மிகுந்த பயத்துடன் தனது துப்பட்டாவை இறுக பிடித்தபடி காரை நோக்கி ஓடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “விலங்குகளை விட மோசமாக ஒரு பெண்ணிடம் கூட்டமாக சேர்ந்து ஆண்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்களா?” என சின்மயி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பொது இடங்களில் பெண் கலைஞர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்காதது குறித்தும், ரசிகர்களின் இத்தகைய வன்முறை போக்கு குறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரபலங்களின் தனிமனித இடைவெளியை மதிக்க தெரியாத ரசிகர்களின் செயலை அநாகரீகமானது என பலரும் சாடி வருகின்றனர்.

