வங்கதேசத்தில் மாணவர் இயக்கத்தின் முக்கிய முகமாக விளங்கிய ஷெரீஃப் உஸ்மான் ஹாடி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சியை வீழ்த்திய போராட்டங்களில் முன்னிலை வகித்த ஹாடி, பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த செய்தி பரவியவுடன், ஆத்திரமடைந்த மாணவர்கள் டாக்காவின் வீதிகளில் இறங்கி போராடினர். இந்த மோதலின் போது இரு முன்னனி பத்திரிகை அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட பெரும் பதற்றத்தை தணிக்க பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூரமான கொலை குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் உறுதியளித்துள்ளார். மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுவதும் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், முக்கிய தலைவரின் இழப்பு அந்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

