கனடாவில் தீவிரமடையும் நாடுகடத்தலால் 19,000 பேர் வெளியேற்றம்.
கனடா அரசாங்கம் 2025ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 19,000 புலம்பெயர்ந்தோரை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
கனடா எல்லை சேவைகள் முகவர் அமைப்பினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் 18,785 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிபரங்கள் சேர்க்கப்படும்போது, இந்த எண்ணிக்கை 18,969ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடங்களின் தரவுகளைப் பார்க்கும்போது, நாடுகடத்தப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. 2023ஆம் ஆண்டில் 15,207 பேரும், 2024ஆம் ஆண்டில் 17,357 பேரும் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
ஒருபுறம் நாடுகடத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் கனடாவின் கடுமையான வீசா கட்டுப்பாடுகள் காரணமாக, சட்டபூர்வமாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைவடைந்து வருகின்றது.
இதேவேளை, அக்டோபர் முதலாம் திகதி நிலவரப்படி, கனடாவின் மொத்த சனத்தொகை 41,575,585 ஆகப் பதிவாகியுள்ளது. 1971ஆம் ஆண்டிற்குப் பின்னர், நாட்டில் தற்காலிகமாக வசிப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவடைந்திருப்பது இதுவே முதல் தடவை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

