பங்களாதேஷில் சமீபத்தில் முன்னணி நாளிதழ் அலுவலகங்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது ‘குளோபல் டிவி’ ஊடக நிறுவனத்திற்கும் மர்ம கும்பல் ஒன்று நேரடி மிரட்டல் விடுத்துள்ளது.
டிசம்பர் 21 அன்று, சுமார் 8 இளைஞர்கள் அந்த அலுவலகத்திற்குள் புகுந்து, அதன் செய்தி பிரிவு தலைவரான நஸ்னின் முன்னியை 48 மணி நேரத்திற்குள் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினர். அவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ‘அவாமி லீக்’ ஆதரவாளர் என்று அந்த கும்பல் குற்றம் சாட்டியுள்ளது.
தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், ‘புரோதோம் ஆலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ அலுவலகங்களுக்கு நேர்ந்தது போலவே இந்த அலுவலகமும் தீக்கிரையாக்கப்படும் என அவர்கள் எச்சரித்தனர். மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட அந்த கும்பலின் மிரட்டலுக்கு பணிய அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மறுத்துவிட்டார்.
இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பிய ஷெரீப் ஒஸ்மான் ஹாடியின் மரணம் தொடர்பான செய்திகளை சரியாக வெளியிடவில்லை என்பதும் அவர்களது ஆத்திரத்திற்கு காரணமாக அமைந்தது. இந்த சம்பவம் பங்களாதேஷில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுவதை உலகிற்கு மீண்டும் உணர்த்தியுள்ளது.

