மேற்கு வங்கத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் நடந்துள்ளதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதாக சாடினார்.
மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்த பணிக்குப் பிறகு, சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.66 கோடியிலிருந்து 7.08 கோடியாக குறைந்துள்ளது. மாநில அரசுக்கு தெரிவிக்காமல் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்தது மற்றும் உள்ளூர் மொழி தெரியாத அதிகாரிகளை கொண்டு இப்பணிகளை மேற்கொண்டதே இவ்வளவு பெரிய குளறுபடிக்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகள் செய்ய வேண்டிய பணியை வெறும் இரண்டு மாதங்களில் அவசரகதியில் முடித்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, சிறுபான்மையின மக்கள் மற்றும் சில குறிப்பிட்ட பிரிவினரின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மம்தா, விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

