நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இப்படத்தின் விநியோக உரிமையை பெற்றிருந்த சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் திடீரென அதிலிருந்து பின்வாங்கியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகும் அதே காலகட்டத்தில், பிரபாஸின் ‘ராஜா சாப்’, சிரஞ்சீவி மற்றும் வெங்கடேஷ் ஆகியோரின் படங்கள் என மொத்தம் ஆறு நேரடி தெலுங்கு திரைப்படங்கள் வெளியாகின்றன. இத்தகைய கடும் போட்டியில் போதுமான திரையரங்குகள் கிடைப்பது கடினம் என கருதியே விநியோகஸ்தர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த சிக்கலுக்கு விரைவான தீர்வு கிடைத்துள்ளது. முன்னணி நிறுவனமான பிவிஆர் ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளது. மேலும், தெலுங்கு திரையுலகின் செல்வாக்குமிக்க தயாரிப்பாளர் தில் ராஜு, நிஜாம் ஏரியாவில் இப்படத்தை விநியோகம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் ஏற்கனவே விநியோகிக்கும் ஐந்து படங்களுடன் சேர்த்து ‘ஜனநாயகன்’ படத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதால், தெலுங்கு மாநிலங்களில் படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டான சூழலில் கிடைத்த இந்த ஆதரவு படக்குழுவினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

