ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற இங்கிலாந்து அணியின் 15 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்டில், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. 175 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களிலேயே எட்டி பிடித்தது.
இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் டக்கெட் மற்றும் கிராவ்லி அதிரடியாக ரன்குவித்தனர். ஜேக்கப் பெத்தேல் 40 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். முன்னதாக, இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
2011ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெறும் முதல் வெற்றி இது என்பதால் அந்த அணி மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. தற்போது தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என முன்னிலையில் உள்ள நிலையில், கடைசி போட்டி ஜனவரி 4-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

