காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வத்ராவின் மகன் ரைஹான் வத்ராவுக்கும், அவரது நீண்டகால தோழியான அவீவா பைக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவீவா பைக் ஒரு தொழில்முறை புகைப்பட கலைஞர் மற்றும் ‘அடெலியர் 11’ என்ற கலை நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
இந்தியாவின் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்த 25 வயது ரைஹான், அரசியலை தவிர்த்து புகைப்பட கலை மற்றும் காட்சி கலைத்துறையைத் தனது வாழ்வாதாரமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். சிறுவயதிலேயே தனது தாய் பிரியங்கா காந்தி அளித்த கேமரா மூலம் வனவிலங்குகளை படம் பிடிக்க தொடங்கிய ரைஹானுக்கு, 2017-ல் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட விபத்தில் இடது கண் பார்வை பறிபோனது. இந்த சவாலையும் மீறி, லண்டனில் கல்வி பயின்ற அவர் மீண்டும் கேமராவை கையில் எடுத்தார்.
தனது பார்வை குறைபாட்டையே ஒரு படைப்பு திறனாக மாற்றிய ரைஹான், ‘டார்க் பெர்செப்ஷன்’ உள்ளிட்ட பல தனிநபர் புகைப்பட கண்காட்சிகளை நடத்தியுள்ளார். கலையின் மீது தீராத ஆர்வம் கொண்ட இரு கலைஞர்களின் இந்த திருமணம், அரசியல் வட்டாரத்தை தாண்டி கலை உலகிலும் கவனத்தை பெற்றுள்ளது.

