வாழ்க்கை சில நேரங்களில் திரைப்படங்களை விடவும் ஆச்சரியமான திருப்பங்களை கொண்டது என்பதற்கு சான்றாக கேரளாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் ரஷ்மி என்பவரை வாலிப பருவத்தில் காதலித்தார். ஆனால், ரஷ்மியிடம் தனது காதலை சொல்ல ஜெயப்பிரகாஷ் பயந்த நிலையில், ரஷ்மிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு ரஷ்மி வெளிநாடு சென்றுவிட்டார். காலப்போக்கில் ஜெயப்பிரகாஷும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார்.
காலச்சக்கரம் சுழன்ற நிலையில், ரஷ்மியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பும், ஜெயப்பிரகாஷின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பும் காலமானார்கள். இந்த சூழலில், தற்செயலாக மீண்டும் சந்தித்த இருவரும் தங்களது பழைய காதலை பகிர்ந்து கொண்டனர்.
தனிமையில் இருந்த இருவரும் மீதமுள்ள வாழ்க்கையை இணைந்து வாழ முடிவு செய்து, 60 வயதில் மணம் புரிந்தனர். இந்த திருமணத்தின் சிறப்பம்சமாக, இருவரது பிள்ளைகளும் நேரில் வந்து தங்கள் பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

