கனடாவில் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் தனது பதவியிலிருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக ஊடகப் பதிவில், ‘எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இந்த வெள்ளிக்கிழமை முதல் துறக்க உள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு இன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டிலிருந்து கனடாவின் நாடாளுமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்கும், கனடிய மக்களுக்கும் சேவை செய்தது மிகப் பெரிய பெருமை எனவும் ஃப்ரீலண்ட் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்காலத்தில் கனடாவைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கும், உக்ரைன் மக்களின் போராட்டத்திற்கும் தனது ஆதரவு தொடரும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஆலோசகராக ஃப்ரீலண்டை நியமிப்பதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றுக்கு ஆலோசகராகப் பணியாற்றும் ஒருவர், உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், ஒழுக்க நெறி விமர்சகர்களும் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்தன.
‘கனடிய மக்களுக்கு சேவை செய்வது பகுதி நேரப் பணி அல்ல. வெளிநாட்டு அரசாங்கத்தில் ஏற்றுக்கொண்டுள்ள இந்தப் பதவி, யாருடைய நலன்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற கேள்வியை எழுப்புகிறது’ என கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் பாரெட் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

