தமிழகத்தின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கல் திருநாள் நெருங்கி வரும் வேளையில், மதுரையில் மல்லிகைப் பூவின் விலை அதிரடியாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளையும் வியாபாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் பூ சந்தையில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை ரூ.7,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய கடும் பனிப்பொழிவு மற்றும் செடிகளில் மொட்டுகள் கருகி வருவது போன்ற காரணங்களால், சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து பாதியாக குறைந்துள்ளது.
பொங்கல் பண்டிகை மற்றும் அடுத்தடுத்து வரும் முகூர்த்த தினங்களால் மல்லிகை பூவின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், பண்டிகை நாட்களில் ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு நிகராக உயரக்கூடும் என்று வியாபாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
மல்லிகை மட்டுமின்றி பிச்சி, முல்லை போன்ற மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்தாலும் தேவை அதிகமாக இருப்பதால், வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

