நள்ளிரவு 2:30 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவரின் உணவை ஜோமாட்டோ டெலிவரி ஊழியர் அவரே அமர்ந்து சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அங்குர் தாக்கூர் என்ற அந்த ஊழியர், வாடிக்கையாளரை வீட்டின் கீழே வந்து உணவை பெற்று கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், வாடிக்கையாளர் தனது வீட்டு வாசலுக்கே வந்து வழங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் வாகனத்தை பாதுகாப்பற்ற முறையில் விட்டுவிட்டு மேலே வர முடியாது என்றும், நள்ளிரவு குளிரில் பணிபுரியும் தங்களுக்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அந்த ஊழியர் வாதிட்டார். இறுதியில் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அதிலிருந்த குலாப் ஜாமூன் மற்றும் பிரியாணியை அங்கேயே அமர்ந்து அவர் சாப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் இணையவாசிகள் இடையே இருவேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. சிலர் வாடிக்கையாளர் வசதிக்காகவே பணம் செலுத்துவதால் வீட்டு வாசலில் தருவதுதான் முறை என்கின்றனர். மற்றவர்களோ, நள்ளிரவு நேர பாதுகாப்பு சிக்கல்களை கருத்தில் கொண்டு ஊழியருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதுவரை இந்த வீடியோ 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

