2026 பொங்கல் திரைப்பயணத்தில் நடிகர் ஜீவா ஒரு மிகப்பெரிய ‘கம்பேக்’ கொடுத்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று, இந்த ஆண்டின் பொங்கல் வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.
நிதீஷ் சஹதேவ் இயக்கத்தில், ஜீவாவின் 45-வது திரைப்படமாக வெளிவந்துள்ள இப்படத்தில் பிரார்தனா கதாநாயகியாகவும், தம்பி ராமையா மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். நேற்று பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த இப்படம், முதல் காட்சியிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் ரேசில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை குழு சிக்கல்களால் வெளியாகவில்லை. இதனால் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாகின.
இருப்பினும், மற்ற படங்களை விட ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீவாவுக்கு ஒரு தரமான வெற்றி படம் கிடைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

