விருதுநகர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று காலை மதுரையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார். தனது டெல்லி பயணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தை முன்வைத்துள்ள அவர், தனது பயணம் தற்பெருமைக்காக அல்ல, மாறாக பல ஆண்டுகளாக தங்களது உரிமைகளை தாரைவார்த்து வரும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை மேலிடத்தில் எதிரொலிக்கவே என்று குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து, தமிழகத்தில் காங்கிரஸின் உரிமைகளை மீண்டும் விட்டு கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையை அழுத்தமாக பதியப்போவதாக தெரிவித்துள்ளார்.
மதவெறி சக்திகளை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றாலும், அதே சமயம் தங்களது தொண்டர்களின் தன்மானமும், ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கும் உரிமையும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். “நட்புக்குத் தோள் கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்ற அவரது வாசகங்கள், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் காங்கிரஸ் அமைச்சரவையில் இடத்தை கோரப்போகிறது என்பதைத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற புதிய அத்தியாயத்திற்கு காங்கிரஸ் தயாராகி வருவதையே இந்தப் பயணம் காட்டுகிறது.

