Canada-வின் Ontario மாகாணத்தில் ஜனவரி 15, 2026 அன்று வீசிய கடும் பனிப்புயல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. 40 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக Environment Canada தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், Ontario அரசாங்கம் தனது பொதுப்பணித்துறை ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணியைத் தொடருமாறு உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக Ministry of Transportation துறையில் உள்ள ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட உள்நாட்டு மின்னஞ்சலில், அரசாங்கத்தின் புதிய ஐந்து நாள் அலுவலக வருகை விதிமுறை நினைவுபடுத்தப்பட்டது.
பனிப்பொழிவு காரணமாக தாமதமாக வரலாம் அல்லது சீக்கிரம் கிளம்பலாம் என்று கூறப்பட்டாலும், வர முடியாதவர்கள் தங்களது Vacation Day-ஐப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் OPSEU மற்றும் AMAPCEO போன்ற தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. சாலைகளில் நூற்றுக்கணக்கான விபத்துகள் நடந்த வேளையில், ஊழியர்களைப் பயணம் செய்யத் தூண்டுவது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் எனத் தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் Remote Work வழங்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பின்னர் காலை 10:35 மணியளவில் சில துறைகளில் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டாலும், அதற்குள் பல ஊழியர்கள் ஆபத்தான பயணத்தைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

