கனடாவில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான போர்ட் ரக வாகனங்கள் தொடர்பாக அவசர எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சின் பிளாக் ஹீட்டரில் ஏற்படக்கூடிய மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கனடிய போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அச்சுறுத்தல் காரணமாக போர்ட் நிறுவனத்தின் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை இரண்டு தனித்தனியான மீளப்பெறல் நடவடிக்கைகளின் கீழ் திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட வாகனங்களில் எஞ்சின் பிளாக் ஹீட்டரில் இருந்து குளிரூட்டும் திரவம் கசியும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் பிளாக் ஹீட்டர் இணைக்கப்பட்டிருக்கும் போது மின் கசிவு ஏற்பட்டுத் தீப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதன்முறையாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, அண்மையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே இந்த மீளப்பெறல் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் போர்ட் எஸ்கேப், போர்ட் போகஸ், லிங்கொன் எம்.கே.சீ, ஃபோர்டு பிராங்கோ, ஃபோர்டு பிராங்கோ ஸ்போர்ட், ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர், ஃபோர்டு மேவரிக், ஃபோர்டு ரேஞ்சர் மற்றும் லிங்கன் கோர்செய்ர் ஆகிய மாடல்கள் உள்ளடங்குகின்றன. மேலதிக விபரங்களுக்கு வாகன உரிமையாளர்கள் போர்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 1-800-565-3673 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

