தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு சமூக கருத்துக்களையும் குடும்பக் கதைகளையும் ஒன்றோடு ஒன்று இணைத்து ஒரு வாழ்வியல் படமாக கொடுத்த இயக்குனர்களில் ஆகச்சிறந்த ஒரு இயக்குனர் கே பாக்யராஜ். இயக்குனர் நடிகர் திரைக்கதை ஆசிரியர் என பன்முக கலைஞர் பாக்யராஜ். தன்னுடைய நகைச்சுவை தொனியுடன் ரசிகர்களை தன் எல்லா படங்களின் மூலமும் எளிதாக கவர்ந்தவர். இந்திய சினிமாவில் திரைக்கதையில் இவரை அடித்துக் கொள்ள வேறு யாராலும் முடியாது. அதனாலேயே இவரை திரைக்கதை மன்னன் என்று அழைக்கிறார்கள்.
சமீபத்தில் தான் இவருக்கு 50வது ஆண்டு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. சினிமாவிற்கு வந்து 50 ஆண்டு நிறைவடைந்த நிலையில் பாக்யராஜை பெருமைப்படுத்தும் வகையில் அந்த விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு பாக்யராஜுடன் பணிபுரிந்த நடிகர் நடிகைகள் டெக்னீசியன்கள் உதவி இயக்குனர்கள் என அனைவருமே வந்து அவரை வாழ்த்தினார்கள். குறிப்பாக ஊர்வசி மேடையில் வந்து பேசிய சில விஷயங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. பாக்யராஜ் இயக்கத்தில் திரைக்கதையில் எத்தனையோ படங்கள் வெளிவந்திருக்கின்றன.
ஆனால் பாக்யராஜ் என்றாலே சட்டென அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது முந்தானை முடிச்சு. அந்தப் படத்தில் ஊர்வசியின் கதாபாத்திரத்தை அற்புதமாக வடிவமைத்திருப்பார் பாக்யராஜ். அதில் ஒரு சில காட்சிகள் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாத மாதிரி இருந்தாலும் அதை அவர் தன்னுடைய திரைக்கதை மூலம் நகர்த்திய விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த நிலையில் ஊர்வசி பாக்யராஜ் பற்றி ஒரு சுவாரசியமான சம்பவத்தை கூறியிருக்கிறார். அதாவது அவர் திரைக்கதை மன்னனாக இருந்தாலும் அவருடைய ஸ்கிரிப்ட்டை மாற்றக்கூடிய ஒரே தகுதி எனக்கு மட்டும்தான் இருக்கிறது. அப்படித்தான் அவருடைய கதையில் முருகேசன் இயக்கத்தில் நானும் பாண்டியராஜும் இணைந்து நடித்த படம் தாய்க்குலமே தாய்க்குலமே.
அதில் பாண்டியராஜுக்கு இரண்டு மனைவிகள். அதில் எனக்கு குழந்தை பாக்கியம் கிடையாது. அதனால் நேபாளி பெண்ணுடன் ஏற்கனவே சகவாசம் வைத்து அந்த பெண்ணுக்கு குழந்தையும் கொடுத்து ரகசியமாக வைத்திருப்பார் பாண்டியராஜ் .எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் ஆசிரமத்தில் குழந்தையை தத்தெடுக்க செல்லும் போது அவருக்கு அந்த நேபாளி பெண்ணுடன் பிறந்த அந்த குழந்தையை ஆசிரமத்தில் காட்டி அதையே என்னை தத்தெடுக்க வைப்பார். அந்தப் பெண்ணையும் என்னுடைய வீட்டு வேலைக்காரியாக பாண்டியராஜ் வைத்திருப்பார்.
இது எதுவுமே எனக்கு தெரியாது. கடைசி கிளைமாக்ஸில் அந்த விஷயம் எனக்கு தெரிய வரவும் கடைசியில் நானும் அந்த பெண்ணும் சமாதானமாகி ஒன்றாக வாழ்வது போல கதை எழுதி இருப்பார். ஆனால் என்னால் முடியாது. நானும் அந்த பெண்ணும் சேர மாட்டோம் என சொல்லி விஷயம் தெரிய வந்ததும் அருகில் இருந்த வடிவேலுவை பளாரென அறைந்து அந்த குழந்தையை நான் தூக்கிக் கொண்டு நீ உன் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்துக்கோ. நான் குழந்தையுடன் போகிறேன் என நான் சென்று விடுவேன். இதை பாக்கியராஜிடம் சொன்னபோது அப்படித்தான் சொல்லுச்சா ஊர்வசி? சரி இருக்கட்டும் என அவரும் சம்மதித்து விட்டார். ஆனால் படம் வெளியாகி அதற்கு ஒரு பெரிய அளவு ரெஸ்பான்ஸ் கிடைத்தது என ஊர்வசி அந்த மேடையில் கூறினார்.

