எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுக தற்போது பாஜகவின் கையில் சிக்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகிறார்கள். அதற்கு காரணம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் ஆளுமை மிக்க தலைவர் அந்த கட்சியில் இல்லாததால் அந்த கட்சியை பாஜக கையில் எடுக்க துவங்கியதாகவும், பாஜக தலைமை சொல்வதைக் கேட்டு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் செயல்பட்டதாகவும் அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அதிமுகவை அடிமைகள் என திமுக தொடர்ந்து விமர்சனம் செய்தது.
அதிமுகவை விட்டு பிரிந்து ஓ.பன்னீர்செல்வம் சில மாதங்கள் தர்மயுத்தம் நடத்திய போது பாஜக தலைமை சொல்லித்தான் அவர் மீண்டும் எடப்பாடியுடன் சேர்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் பாஜகவை அதிமுக தன்னுடைய கூட்டணியில் இணைத்திருக்கிறது என சொல்ல முடியவில்லை. ஏனெனில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருப்பது போலவே தோற்றம் உருவாகியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு அதிமுக- பாஜக கூட்டணி உருவானபோது அதை அமித்ஷாதான் செய்திகளிடம் அறிவித்தார்.. எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவில்லை… அப்போதே இந்த விமர்சனம் எழுந்தது. பாஜக தலைமையில் கூட்டணி, பாஜக சொல்பவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றெல்லாம் பாஜகவினர் பேசினார்கள். அமித்ஷா பேசியதே அந்த தொனியில்தான் இருந்தது. சில நாட்களில் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.. அதிமுக தலைமையில்தான் கூட்டணி.. நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்.. அதேபோல் கூட்டணி ஆட்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.
சமீபத்தில் அதிமுக, பாஜக, பாமக, தாமாகா உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி அமைத்தன. சமீபத்தில், பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகத்தில் பொதுக்கூட்டமும் நடந்தது. அந்த மேடையில் பேசிய மோடி எந்த இடத்திலும் அதிமுக கூட்டணி என சொல்லவில்லை. தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றுதான் பேசினார். இதைத்தொடர்ந்து அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் என எல்லோருமே தேசிய ஜனநாயக கூட்டணி என்றுதான் சொல்கிறார்கள்.
இதை பார்க்கும்போது இது அதிமுக தலைமையிலான கூட்டணியா இல்லை தேசிய ஜனநாயக கூட்டணியா என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்திருக்கிறது.. தேர்தலுக்காக, அரசியல் ஆதாயத்திற்காக எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதாவில் வளர்த்தெடுக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது முகத்தை இழந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்ல துவங்கிவிட்டனர்.

