கனடிய மக்களின் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி கொடுப்பனவுத் தொகையை உயர்த்துவது குறித்து பிரதமர் மார்க் கார்னி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குளிர்கால இடைவேளை முடிந்து பாராளுமன்றம் மீண்டும் கூடியுள்ள நிலையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Canada Grocery and Essential Benefit என்ற புதிய திட்டத்தை பிரதமர் கார்னி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் GST தொகையானது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 சதவீதம் வரை படிப்படியாக உயர்த்தப்படவுள்ளது. அத்துடன், வரும் ஜூன் மாதத்தில் 50 சதவீத கூடுதல் ஒருமுறை மட்டும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய கணக்கீட்டின்படி, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் இந்த ஆண்டு அதிகபட்சமாக 1,890 டொலர் வரை உதவித் தொகையைத் திரட்ட முடியும். இது தற்போது வழங்கப்படும் 1,100 டொலரை விட அதிகமானது. அதேபோல் தனிநபர் ஒருவருக்கு தற்போது கிடைக்கும் 540 டொலர் நிதி உதவி, இந்த ஆண்டு முதல் 950 டொலராக உயர்த்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மளிகைப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அன்றாட அத்தியாவசியச் செலவுகளால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நிதி அழுத்தத்தைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

