கனடாவில் ஜாரெல்டோ எனப்படும் இரத்த உறைவுத் தடுப்பு மருந்தை உட்கொண்டவர்களுக்கு பல மில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பீடு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருந்தை உட்கொண்டதால் இரத்தப்போக்கு தொடர்பான பாதிப்புகளைச் சந்தித்தவர்கள் இந்த இழப்பீட்டுத் தொகைக்குத் தகுதியுடையவர்கள் என்று மெர்ச்சண்ட் லா குரூப் எல்.எல்.பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சஸ்காட்செவன் மற்றும் கியூபெக் மாகாணங்களில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்ட நடவடிக்கையின்படி 4.5 மில்லியன் முதல் 5.25 மில்லியன் டாலர் வரையிலான நிதி ஒதுக்கப்பட உள்ளது. அக்டோபர் 27, 2025-க்கு முன்னதாக கனடாவில் ஜாரெல்டோ மருந்தை உட்கொண்ட கியூபெக் அல்லாத பிற மாகாண வாசிகள் இந்த சட்ட நடவடிக்கையில் உறுப்பினர்களாகக் கருதப்படுவார்கள்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மாகாண சட்டங்களின்படி இழப்பீடு கோர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மருந்து குறித்த புகார்களை அதன் தயாரிப்பு நிறுவனமான பேயர் மறுத்துள்ளது. நீதிமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முன்மொழியப்பட்ட இழப்பீட்டுத் திட்டம் குறித்த இறுதி விசாரணை ரெஜினாவில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய நபர்கள் தற்போது எவ்வித விண்ணப்பமும் செய்யத் தேவையில்லை. இந்த சட்ட நடவடிக்கையிலிருந்து விலக விரும்புவோர் மட்டும் 2026 மார்ச் 10-ஆம் தேதிக்குள் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

