சாலையில் செல்லும் பெண்களை பார்த்து கண்ணடிப்பதோ அல்லது முத்தங்களை வீசுவதோ வெறும் கிண்டல் கிடையாது, அது பாலியல் தொல்லைதான் என சண்டிகர் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
2021-ம் ஆண்டு, 61 வயது முதியவர் ஒருவர் தன்னை நோக்கி ஆபாச சைகைகள் காட்டியதாக ஒரு இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, அந்த முதியவர் தான் பாலியல் ரீதியாக எந்த தொந்தரவும் செய்யவில்லை என்றும், அந்த பெண்ணைப் பார்த்து கண்ணடித்து ஃப்ளையிங் முத்தங்களை மட்டுமே வீசியதாகவும் கூறினார்.
ஆனால், அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவரை பார்த்து கண்ணடிப்பதும், ஃப்ளையிங் முத்தங்களை வீசுவதும் அவரது கண்ணியத்தை குலைக்கும் செயலாகும் என்று சுட்டிக்காட்டினார். இது சட்டப்படி பாலியல் சீண்டல் பிரிவின் கீழேயே வரும் என கூறி, அந்த முதியவரை குற்றவாளி என அறிவித்தார். இதற்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தீர்ப்பு சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் பெண்களை கிண்டல் செய்வது அல்லது சைகைகள் செய்வது போன்ற செயல்கள் இனி கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

