உத்தரப்பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில், இளம்பெண் ஒருவர் மாயமான சம்பவம் கிராமத்தையே அதிரவைத்துள்ளது.
மாயமான பெண்ணின் படுக்கையில் ஐந்து அடி நீளமுள்ள பாம்பின் சட்டை துணிகளால் சுற்றப்பட்டு இருந்ததை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அந்த பெண் ‘நாகினியாக’ மாறிவிட்டதாக கிராமம் முழுவதும் மூடநம்பிக்கையும், வதந்திகளும் காட்டுத்தீயாய் பரவின. பீதியடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இருப்பினும், காவல்துறையினரின் விசாரணையில் இது முற்றிலும் திட்டமிடப்பட்ட நாடகம் என்பது அம்பலமானது. அதே கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை அந்த பெண் காதலித்து வந்ததும், அவருடன் தப்பி செல்வதற்காகவே இந்த ‘சினிமா பாணி’ காட்சியை அவர் அமைத்ததும் தெரியவந்தது.
மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், தன் மாயமான சூழலை மர்மமாக மாற்றவும் அவர் திட்டமிட்டு பாம்பின் சட்டையை படுக்கையில் வைத்துவிட்டு சென்றுள்ளார். தற்போது அந்த பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். மூடநம்பிக்கையால் பரவிய ‘நாகினி’ வதந்திக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

