சமீபத்தில் அமீர் மற்றும் சூரியா சந்தித்த அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அதற்கு முன்பு வரை அமீருக்கும் சூர்யாவுக்கும் இடையே மறைமுகமாக மோதல் இருப்பதாகவே ஒரு தகவல் இருந்து வந்தது. அதைப் பற்றி பல பத்திரிகைகள் செய்திகளை தொடர்ந்து எழுதி வந்தனர். ஆனால் சூர்யா தரப்பில் இருந்தும் அமீர் தரப்பிலிருந்தும் அதற்காக எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனால் அமீர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது மௌனம் பேசியதே படத்தின் ரிலீஸ் சமயத்தில் சூர்யா படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னதாகவும் அதற்கு அமீர் ஓ அப்படியா என்று அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் அது ஒருவேளை சூர்யாவுக்கு வருத்தத்தை தந்திருக்கலாம் என்றும் அமீர் கூறி இருந்தார்.
அதே பேட்டியில் தான் ஆரம்பத்தில் சூர்யா நடிகர் ஆவதற்கு முன்பில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். திடீரென சார் என சொல்ல வேண்டும் என்று வரும் பொழுது போலியாக என்னால் அதை சொல்ல முடியாது. சரி இன்று அவர் உயர்ந்துவிட்டார், ஒரு உச்சத்தை அடைந்து விட்டார், அதனால் சார் என சொல்லுவோம் என்று என் வாய் சொன்னாலும் என் மனது அதை ஏற்றுக் கொள்ளாது என்றெல்லாம் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதனால் ஒருவேளை அமீருக்கும் சூர்யாவுக்கும் இடையே ஒரு ஈகோ பிரச்சினையாக கூட இருந்திருக்கலாம் என அந்த பேட்டியின் மூலம் நமக்கு தெரியவந்தது.
இந்த நிலையில் தான் மௌனம் பேசியதே படத்தின் ரீ ரிலீஸுக்கு பிறகு அமீர் மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் ரகு இவர்களுடன் சூர்யா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதைப் பற்றி அந்த தயாரிப்பாளர் கணேஷ் ரகுவே அந்த சந்திப்பில் என்னெல்லாம் நடந்தது என்பதை பற்றி கூறியுள்ளார். திடீரென சூர்யா எனக்கு போன் செய்து உங்களை நான் சந்திக்க வேண்டும் எனக் கூறி ஹயாத் ஹோட்டலுக்கு வர சொல்லி இருந்தார். அந்த நேரத்தில் நான் அமீர் இயக்கத்தில் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தில் நடித்து வந்தேன்.
சூர்யா போன் செய்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. வரும் பொழுது அமீரையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று சூர்யா சொன்னார். நான் கூப்பிட்டால் வரமாட்டார் நீங்களே கூப்பிடுங்கள் என்று நான் சொன்னேன். அதைப்போல சூர்யாவும் அமீருக்கு போன் செய்து அவரை வரச் சொல்லி இருந்தார். மூன்று பேரும் அன்று ஒரு நான்கு மணி நேரம் பேசிக் கொண்டே இருந்தோம். அமீருக்கும் சூரியாவுக்கும் நடக்கும் இந்த சர்ச்சைகள் பற்றி அன்று எதுவுமே பேசவில்லை.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படி பேசுவார்களோ அதே மாதிரியான ஒரு உணர்வில் தான் நாங்கள் மூவரும் இருந்தோம். அந்த சந்திப்பில் கூட இதே கூட்டணி மறுபடியும் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்றெல்லாம் ஒரு முடிவை எடுத்தோம். ஆனால் எந்தெந்த டெக்னீசியன்கள் படத்தில் இருக்க வேண்டும்? யாரெல்லாம் இருக்க வேண்டும்? படம் என்ன மாதிரியான கதை என்பதை பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதே கூட்டணி மறுபடியும் இணைய வேண்டும் என்ற ஒரு முடிவை மட்டும் நாங்கள் எடுத்து இருக்கிறோம் என தயாரிப்பாளர் கணேஷ் ரகு கூறியுள்ளார்.

