தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி, தற்போது மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. அனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஆர்.என். ரவி அந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு நிர்வாக விவகாரங்களில் நீண்டகாலமாக தொடர் மோதல் போக்கு நிலவி வந்தது. இத்தகைய அரசியல் சூழலில், இந்தத் திடீர் மாற்றம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், மாநிலத்திற்கு ஒரு முழுநேர ஆளுநரை மத்திய அரசு எப்போது நியமிக்கும் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. தற்காலிகமாக கூடுதல் பொறுப்பின் கீழ் தமிழக ஆளுநர் மாளிகை செயல்பட தொடங்கியுள்ளது.

