உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் அவசரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளனர்.
அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்தந்த நாடுகளின் அவசர கால எரிபொருள் கையிருப்புகளைச் சந்தைக்கு விடுவிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது. எரிபொருள் கையிருப்புகளை விடுவிக்கும் இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா ஏற்கனவே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடத்தக்கது.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் G7 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 117.65 டொலரிலிருந்து 104 டொலராகக் குறைந்துள்ளது.
தற்போது நிலவும் உலகளாவிய போர் பதற்றங்கள் மற்றும் அரசியல் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. இந்த விலையேற்றம் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் G7 நாடுகளின் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

