சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், ‘பிரீமியம்’ மின்சார பேருந்து சேவையை இன்று அறிமுகம் செய்துள்ளது.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்த இந்த சேவை, முதற்கட்டமாக கோயம்பேடு – சிறுசேரி மற்றும் கிளாம்பாக்கம் – திருவான்மியூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.
டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களைப் பின்பற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தப் பேருந்துகளில், நடத்துநர் இல்லா டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ‘சென்னை ஒன்’ செயலி மூலம் மட்டுமே தங்களின் இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும்.
சொகுசு இருக்கைகள், குளிர்சாதன வசதி, இலவச வைஃபை மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்கள் இந்தப் பேருந்தின் தனிச்சிறப்பாகும். மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக இருக்கைகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன. பயணக் கட்டணமாக ரூ. 50 முதல் ரூ. 150 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொகுசு பயணத்தை விரும்புவோருக்கு இது சிறந்த மாற்றாக அமையும். இந்த சேவையின் வரவேற்பை பொறுத்து, சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று எம்டிசி தெரிவித்துள்ளது.

