இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2026-27 நிதியாண்டிற்கான FASTag வருடாந்திர பாஸ் கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் வணிகம் அல்லாத தனியார் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான பாஸ் கட்டணம் 3,000 ரூபாயிலிருந்து 3,075 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களின் வசதிக்காக FASTag 2025-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த வருடாந்திர பாஸ் மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை ஓராண்டு காலத்தில் அல்லது 200 முறை வரை கட்டணமின்றி கடக்க முடியும்.
தற்போது இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர். புள்ளிவிவரங்களின்படி, தனியார் கார்களின் சுங்கச்சாவடி பரிவர்த்தனைகளில் 28 சதவீதம் இந்த வருடாந்திர பாஸ் மூலமே நடைபெறுகின்றன.
தகுதியுள்ள வாகன உரிமையாளர்கள் Rajmarg Yatra செயலி அல்லது NHAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக இந்த பாஸைப் பெறலாம் அல்லது புதுப்பிக்கலாம். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திய 24 மணி நேரத்திற்குள் இந்த பாஸ் செயல்பாட்டிற்கு வரும். இந்தியாவில் தற்போது 98 சதவீத சுங்கக்கட்டணம் ஃபாஸ்டேக் மூலமே வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
போர் காரணமாக ஏற்கனவே சிலிண்டர் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த நிலையில், FASTag கட்டணத்திற்கும் போருக்கும் என்ன சம்பந்தம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

