சேது திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி அதன்பின் தில், தூள், சாமி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களால் சியான் என கொண்டாடப்பட்ட விக்ரமின் மகன்தான் துருவ். அப்பா சினிமாவில் இருந்ததால் இயல்பாகவே துருவுக்கும் சினிமாத்துறை பிடித்துப் போனது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் அப்பா விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார். அதன்பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற படத்தில் நடித்தார். இதற்காக கடுமையான கபடி பயிற்சிகளை துருவ் மேற்கொண்டார். இந்த படம் அசத்தலான வெற்றியை பெற்று பல கோடிகள் வசூல் செய்ததோடு துருவின் நடிப்பும் பாராட்டை பெற்றது.
இந்த படத்திற்கு பின் பெரிய இயக்குனர்கள், நல்ல கதை, பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவெடுத்தார் துருவ். மணிரத்தினம் புதிதாக இயக்கவுள்ள படத்தின் வாய்ப்பு கூட துருவை தேடி வந்தது. ஆனால் என்ன காரணமோ அதில் அவர் நடிக்கவில்லை..
பைசன் வெளியாகி 8 மாதங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில்தான், அரவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கவுள்ள ஒரு படத்தில் துருவ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகிறது.

