தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் பரத். செல்லமே, வெயில், காதல் என பல வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அவரது லேட்டஸ்ட் ரிலீஸான காளிதாஸ் 2 நேற்று வெளியானது. முதல் பாகம் வெற்றியானதால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் நிலவரம், படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமானாலும், பரத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ படம்தான். அதன்பிறகு ‘செல்லமே’, ‘வெயில்’, குடும்பங்களை ஈர்த்த ‘எம்டன் மகன்’, சிக்ஸ் பேக் வைத்து மிரட்டிய ‘555’ எனப் பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார்.
ஒரு சிறிய சறுக்கலுக்குப் பிறகு, 2019-ஆம் ஆண்டு வெளியான காளிதாஸ் படத்தின் முதல் பாகம், பரத்திற்கு ஒரு மாபெரும் ‘கம்பேக்’ படமாக அமைந்தது. ஒரு நேர்த்தியான க்ரைம் த்ரில்லராக உருவான அப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியின் நம்பிக்கையில்தான், தற்போது காளிதாஸ் 2 உருவாகி நேற்று வெளியானது. ஆனாலும் காளிதாஸ் வெற்றியை பரத் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
படம் வெளியான முதல் நாளே படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கின. திரைக்கதையில் முதல் பாகத்தில் இருந்த அந்த விறுவிறுப்பு இரண்டாம் பாகத்தில் சற்று மிஸ் ஆவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், முன்னணி பாக்ஸ் ஆபிஸ் டிராக்கிங் தளமான Sacnilk வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ‘காளிதாஸ் 2’ திரைப்படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் வெறும் ரூ. 30 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை என்பது ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும் விடுமுறை தினமான இன்றும் நாளையும் இப்படம் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

