தமிழக இளைஞர்களின் மனவோட்டம் மற்றும் அரசியல் முதிர்ச்சி குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடத் தலைவர்களின் பின்னால் திரளும் இளைஞர்களை பக்குவமற்றவர்கள் என்று கூறுவதை அவர் வன்மையாக மறுத்துள்ளார். குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற போது 20 லட்சமாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, தற்போது 35 லட்சமாக உயர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அறிவார்ந்த முறையில் சிந்திக்கும் இளைஞர்கள் திமுக பக்கமே உள்ளனர் என்பதற்கு, உதயநிதி உருவாக்கிய 182 இளம் பேச்சாளர்களே சாட்சி என்றும், இதுபோன்ற முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வேறு எந்த கட்சியிலும் இல்லை என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தவெக கூட்டங்களில் இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாமல் இரும்பு கம்பிகளில் களிம்பு தடவும் சூழல் நிலவுவதாக விமர்சித்த அவர், உதயநிதி பங்கேற்கும் கூட்டங்கள் மிகுந்த ஒழுக்கத்துடனும் கட்டுக்கோப்புடனும் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.
விஜய்யைக் காட்டிலும் உதயநிதிக்கே இளைஞர்களிடம் அதிக வரவேற்பு இருப்பதாகவும், தமிழகத்தின் அறிவுார்ந்த இளைய தலைமுறை உதயநிதியின் பக்கமே நிற்கிறது என்றும் அவர் அந்தப் பேட்டியில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

