கனடாவில் சுமார் 5,616 வாகனங்களை மீளப்பெறுவதாக Hyundai நிறுவனம் அறிவித்துள்ளது. பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள செக் வால்வில் ஏற்படும் கோளாறு காரணமாக எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில வாகனங்களில், இந்தக் கோளாறினால் எரிபொருள் தொட்டி விரிவடைந்து, வாகனத்தின் சூடான பாகங்களுடன் தொடர்பு கொள்ளும் நிலை உருவாகலாம் எனவும், இது எரிபொருள் கசிவுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மீளப்பெறல் நடவடிக்கையானது, 1.6 லீற்றர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட 2020 முதல் 2023 வரையான Hyundai Sonata மாதிரிகளுக்குப் பொருந்தும்.
இந்த அறிவிப்பு, முன்னர் வெளியிடப்பட்ட ஒரு மீளப்பெறல் அறிவிப்பை பிரதியீடு செய்கிறது. எனவே, முன்னர் பழுதுபார்க்கப்பட்ட வாகனங்களும் மீண்டும் ஒருமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு Hyundai நிறுவனம் கடிதம் மூலம் அறிவிக்கும் எனவும், அவர்கள் அருகிலுள்ள விநியோகத்தரிடம் சென்று செக் வால்வைப் பரிசோதித்து மாற்றிக்கொள்வதுடன், ECU மென்பொருளையும் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், எரிபொருள் தொட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாகங்களும் பரிசோதிக்கப்பட்டு, தேவைப்பட்டால் பழுதுபார்க்கப்படும்.
கடந்த இரண்டு மாதங்களில், ஆசனப்பட்டி மற்றும் ஸ்டார்ட்டர் மோட்டார் கோளாறுகள் காரணமாக Hyundai நிறுவனம் கனடாவில் பல்லாயிரக்கணக்கான வாகனங்களை மீளப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

