மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ள ‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்ட மசோதாவிற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.
இந்த புதிய மசோதாவின்படி, வேலை நாட்களின் எண்ணிக்கை 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டாலும், திட்டத்திற்கான முழு நிதியையும் மத்திய அரசு அளித்துவந்த நிலையில், இனி மாநில அரசுகள் 40% நிதியை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மசோதாவில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்குதல் மற்றும் அதிகாரத்துவ தன்மை அதிகரிப்பது ஆகியவற்றை சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி பேசினார். அப்போது அவர், “மகாத்மா காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஆனாலும் அவர் என் குடும்ப உறுப்பினர் போன்றவர். காந்தி ஒட்டுமொத்த தேசத்தின் உணர்வு” என்று உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
இந்த மசோதாவை அவசரப்பட்டு விவாதமின்றி நிறைவேற்ற கூடாது என்றும், அதை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிரியங்கா காந்தி மற்றும் திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோரின் எதிர்ப்புக்கிடையே மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

