உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த 4 வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் இணைய உக்ரைன் விரும்பியது. ஆனால் இது ரஷ்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகாது. நேட்டாவோடு இணைய முடிவெடுத்தால் உங்கள் மீது போர் தொடுப்போம் என ரஷ்ய அதிபன் புதின் அறிவித்தார். ஆனாலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே போர் துவங்கியது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் போருக்கு உதவி செய்தன. அந்த நம்பிக்கையில்தான் உக்ரைன் ரஷ்யாவோடு போரிட்டது.
ஆனால் தற்போது இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் விரும்புகிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போரில் கைப்பற்றப்பட்ட சில நிலங்களை திருப்பி கொடுப்பது உள்ளிட்ட பல கண்டிஷன்களை அவர் போட அதற்கு ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார். எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில்தான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் ஜெலன்ஸ்கி ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் சென்றிருந்தபோது அங்கு அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்பு போரை நிறுத்தம் தொடர்பாக சில கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
நேட்டா கூட்டமைப்பில் சேர வேண்டும் என்றுதான் உக்ரைன் விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் சில உறுப்பு நாடுகள் அதை ஆதரிக்கவில்லை. எனவே இனிமேல் அது பற்றி அழுத்தம் கொடுக்க மாட்டோம்.. அதேநேரம் எங்கள் மீது ரஷ்யா மற்றொரு தாக்குதலை நடத்தாது என உத்தரவாதம் கொடுத்தால் நோட்டா கூட்டமைப்பில் இணையும் முடிவை நாங்கள் கைவிட தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஜெலன்ஸ்கியின் இந்த முடிவை ரஷ்ய அதிபர் புதின் ஏற்றுக்கொண்டால் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.

