உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, கனடாவின் முன்னாள் அமைச்சர் Chrystia Freeland தனது பொருளாதார மேம்பாட்டு ஆலோசகராக நியமித்துள்ளார்.
ரஷ்யாவுடனான போரின் போது உக்ரைனுக்கு ஃப்ரீலாண்ட் தனது ஆதரவை நீண்டகாலமாக வெளிப்படுத்தி வருகிறார். திங்கட்கிழமை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், உக்ரைன் தனது “உள்நாட்டுப் பின்னடைவை” வலுப்படுத்த வேண்டும் என்று செலென்ஸ்கி குறிப்பிட்டார்.
“கிறிஸ்டியா இந்த விடயங்களில் அதிக திறமை வாய்ந்தவர். முதலீடுகளை ஈர்ப்பதிலும் பொருளாதார மாற்றங்களைச் செயல்படுத்துவதிலும் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது” என்றும் அவர் கூறினார். உக்ரைனிய வம்சாவளியைச் சேர்ந்த ஃப்ரீலாண்ட், ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தில் பிரதிப் பிரதமராகவும் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னர், பிரதமர் மார்க் கார்னியால் உக்ரைனின் புனரமைப்புக்கான கனடாவின் விசேட பிரதிநிதியாகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த செப்டெம்பர் மாதம் அமைச்சரவையிலிருந்து விலகிய போதிலும், ரொரன்ரோவில் உள்ள யுனிவர்சிட்டி-ரோஸ்டேல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில், கார்னி பாரிஸில் உள்ள மற்ற நட்பு நாடுகளைச் சந்திக்கச் சென்றுள்ள நிலையில் இந்த நியமனம் வந்துள்ளது.

