வங்கதேசத்தில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.
நேற்று நடைபெற்ற இந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் BNP கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் தான் போட்டியிட்ட போக்ரா மற்றும் டாக்கா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி வெறும் 34 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடும் பின்னடைவை சந்தித்தது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டதால், அக்கட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை.
2024-ல் ஏற்பட்ட மாணவர்கள் எழுச்சி மற்றும் 18 மாத கால இடைக்கால அரசுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தல், வங்கதேசத்தின் ஜனநாயகப் பாதையில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள தாரிக் ரஹ்மான், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தைச் சீரமைப்பதே தமது முதல் முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளார்.

