இந்தியப் பெருங்கடல் அமைதியான பிராந்தியமாக இருக்க வேண்டும் என்றும், அது எந்தவொரு இராணுவ மோதல்களின் ஒரு பகுதியாக மாறக்கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் போர் இரண்டாவது வாரத்தில் நுழையும் வேளையில், போரின் அரங்கம் வெகுவாக விரிவடைந்து, இலங்கையின் கடல் பகுதியை அடைந்துள்ளது.
இலங்கை கடற்கரையில் சர்வதேச கடல் பகுதியில் ஈரானிய போர்க்கப்பலான
ஐரிஸ் தேனா (IRIS Dena) மூழ்கடிக்கப்பட்டதாலும், இரண்டாவது ஈரானிய கப்பலான ஐரிஸ் புஷேஹர் ( IRIS Busheher) நிறுத்தப்பட்டதாலும், இலங்கை மறைமுகமாக மோதலில் சிக்கியுள்ளது.
ஐரிஸ் தேனா மற்றும் ஐரிஸ் புஷேஹர் ஆகிய கப்பல் விபத்துகளில் இருந்து தப்பிய அனைவருக்கும் சர்வதேச நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடக்கில் உள்ள திருகோணமலையில் நிறுத்த அனுமதிக்கப்பட்ட கப்பலின் பணியாளர்களை ஏற்றிச் செல்வது தனது நாட்டிற்கு “மனிதாபிமான பொறுப்பு” என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்தியச் செய்திச் சேவையான என்டிடிவிக்கு அளித்த விசேட செவ்வியிலேயே மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்.
விரிவடையும் மோதலானது 2022 ஆம் ஆண்டில் அதன் மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னும் மீண்டு வரும் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.
மத்திய கிழக்கு மோதல் ஏற்கனவே ஏனைய நாடுகளுக்கும் பரவி வருகிறது, இது இலங்கை மற்றும் இலங்கை மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் இருந்த மூன்றாவது ஈரானியக் கப்பலான ஐரிஸ் லாவன் (IRIS Lavan), இந்தியாவின் கொச்சியில் நங்கூரமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

