கோடைகால வெப்பம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில், ஏசி பயன்பாட்டை குறைத்து வீடுகளை குளிர்ச்சியாக வைத்திருக்க புதிய கட்டுமான முறைகளை மக்கள் நாடி வருகின்றனர். அவற்றுள் தற்போது அதிகம் கவனத்தை ஈர்த்து வருவதுதான் EPS Wall Technology எனப்படும் தெர்மாகோல் வீட்டு கட்டுமான முறையாகும்.
EPS என்பது எக்ஸ்பாண்டட் பாலிஸ்டிரைன் என்பதை குறிக்கும். இது நாம் அன்றாடம் பார்க்கும் லேசான தெர்மாகோல் போன்ற ஒரு பொருளாகும். இந்த EPSபேனல்களுக்குள் அதிகளவில் காற்று அடைபட்டிருப்பதால், இவை வெளி வெப்பத்தை வீட்டிற்குள் கடத்தாமல் ஒரு சிறந்த வெப்பத் தடுப்பானாக செயல்படுகின்றன. இதனால் பாரம்பரிய செங்கல் கட்டுமானங்களை விட, இபிஎஸ் சுவர்கள் கொண்ட வீடுகளில் உட்புற வெப்பநிலை சீராகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். இது குளிர்ச்சியூட்டும் சாதனங்களின் தேவையைக் குறைத்து, மின்சாரக் கட்டணத்தையும் மிச்சப்படுத்த உதவுகிறது.
மேலும், இந்த EPSபேனல்கள் மிகவும் எடை குறைந்தவை என்பதால் இவற்றை எளிதாக எடுத்துச் செல்லவும், கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்கவும் முடியும். கூரைகள் மற்றும் சுவர்களில் வெப்பப் பரிமாற்றத்தைத் தடுக்க இது பெரிதும் உதவுகிறது.
எனினும், EPSதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது முறையான காற்றோட்டம், ஈரப்பத பாதுகாப்பு மற்றும் தகுந்த பாதுகாப்பு அடுக்குகளை அமைப்பது அவசியம். நவீன மற்றும் ஆற்றல் திறன் மிக்க வீடுகளுக்கு இபிஎஸ் தொழில்நுட்பம் ஒரு சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளது.

