கனடாவின் பிராம்ப்டன் நகரில் முதியோர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு பாரிய முதலீட்டு மோசடி தொடர்பாக 62 வயதான நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நவ்தீப் போபராய் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், BLM Canada Corporation என்ற நிறுவனத்தின் மூலம் சுமார் 1.4 மில்லியன் டாலர் மதிப்பிலான போன்சி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2017-ஆம் ஆண்டு முதல் இந்த மோசடித் திட்டம் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நவ்தீப் போபராயை ஒரு வெற்றிகரமான அடமானத் தரகர் என்று நம்பிப் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.
தனியார் அடமானங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சட்டப்பூர்வ அறக்கட்டளைகளில் முதலீடு செய்யப்படுவதாகவும், அதற்கு உறுதியான இலாபம் கிடைக்கும் என்றும் முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சில முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகையானது, மற்ற புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் என்பதைப் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் முதலீடுகளில் இலாபம் கிடைப்பது போன்ற ஒரு மாயையை அவர் உருவாக்கியுள்ளார்.
இந்த மோசடியில் இதுவரை 1,465,000 டாலர் மொத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 26 அன்று கைது செய்யப்பட்ட போபராய் மீது மோசடி, குற்றச்செயல் மூலம் சொத்து சேர்த்தல் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 29 அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

