கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா ஜோகிஹள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை-48 இல் ஒரு கார் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் நாகேந்திரா என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த பெண்ணும், டிரைவர் பிரவீனும் காயங்களுடன் தப்பினர்.
போலீஸ் விசாரணையில், பெங்களூரு ஜெயநகரில் ஓடி டெக்னீஷியனாக பணிபுரியும் ஒரு பெண்ணும், நாகேந்திராவும் காதலித்து பிரிந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண் நாகேந்திராவின் போன் நம்பரை பிளாக் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரா, நேற்று காலை பெண்ணின் வாடகை வீட்டிற்குச் சென்று அவருடன் தகராறு செய்து, உபெர் கேப் மூலம் அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் ஜெயநகர் போலீசில் புகார் அளித்தனர்.
காரில் செல்லும்போதே நாகேந்திரா வெடிபொருளைக் காட்டி, பெண்ணைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். ஜோகிஹள்ளி அருகே சென்றபோது, காரினுள்ளேயே பெண்ணைக் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் டிரைவர் காரை நிறுத்த, அந்தப் பெண் கதவைத் திறந்து கீழே குதித்துத் தப்பினார்.
அடுத்த கணமே காரில் இருந்த குண்டு பயங்கரமாக வெடித்துச் சிதறி கார் தீப்பற்றியது. இதில் நாகேந்திரா காரினுள்ளேயே மாட்டிக்கொண்டு கருகிச் செத்தார். கள்ளம்பெல்லா போலீசார் வழக்குப் பதிவு செய்து, வெடிபொருள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

