தமிழ் சினிமாவில் க்ரைம் த்ரில்லர் படங்களுக்கும், காமெடி படங்களுக்கும் எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால், இந்த இரண்டு ஜானர்களையும் மிகச் சரியான கலவையில் கலந்து, ஒரு டார்க் காமெடி க்ரைம் த்ரில்லர் படமாக கொடுப்பது சவாலான விஷயம். அந்த சவாலை கையில் எடுத்து, ரசிகர்களை தியேட்டர்களில் சீட்டின் நுனிக்கே வரவழைத்து லைக்ஸ் போட வைத்துள்ளது கடந்த ஜூன் 26 அன்று வெளியான கான் சிட்டி திரைப்படம்.
நட்சத்திர பட்டாளங்கள் மற்றும் புதுமையான கதைக்களத்துடன் வெளியான இப்படம், தற்போது பாக்ஸ் ஆபீஸில் மெல்ல மெல்ல முன்னேறி, கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ. 4.29 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கைதி, ‘மாஸ்டர்’ பட புகழ் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். எப்போதும் தனது கம்பீரமான குரலால் மிரட்டும் அர்ஜுன் தாஸ், இதில் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி, எளிய நடுத்தர வர்க்கத்து இளைஞனாக எமோஷனல் மற்றும் காமெடி கலந்த புதுமையான பரிமாணத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். அர்ஜூன் தாஸூடன் ராதாரவி, VTV கணேஷ், பொன்வண்ணன், பரத்வாஜ் ரங்கன், மதன் தக்ஷிணாமூர்த்தி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு, அதன் பலமான திரைக்கதையும், கதாபாத்திர தேர்வும் பெரும் பலமாக அமைந்துள்ளது.
நெட்டிசன்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். முதல் பாதி கதாபாத்திரங்களை வடிவமைக்க சற்று மெதுவாக நகர்ந்தாலும், இடைவேளைக்கு பிறகு படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது , என்றும், லாஜிக் குறைபாடுகள் சில இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதையும், டிரை ஹியூமரும் படத்தை தியேட்டரில் ரசிக்க வைக்கிறது” என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
வார நாட்களிலும் மதிய மற்றும் இரவு காட்சிகளுக்கு தியேட்டர்களில் கணிசமான கூட்டம் வருவதால், இந்த வார இறுதிக்குள் கான் சிட்டி படத்தின் வசூல் இன்னும் பல மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

