மத்திய அரசு சமூக பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ், பழைய 1952 திட்டத்திற்கு மாற்றாக புதிய ‘ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம், 2026’-ஐ தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய விதிகளின்படி, பிஎஃப் உறுப்பினர்கள் தங்களின் தகுதியான மொத்த தொகையில் 75 சதவீத பணத்தை முக்கிய தேவைகளுக்காக பகுதிப் பணமாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், மீதமுள்ள 25 சதவீத தொகையைக் கணக்கில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒருவரது பிஎஃப் கணக்கில் ரூ.1 லட்சம் தகுதியான தொகை இருந்தால், அவர் ரூ.75,000 வரை அவசரத் தேவைக்கு எடுக்க முடியும்; ரூ.25,000 கணக்கிலேயே எப்போதும் இருக்க வேண்டும்.
சொந்த மற்றும் குடும்பத்தினரின் மருத்துவம், கல்விச் செலவுகள் , திருமணம் , வீடு வாங்குதல், கட்டுதல், மராமத்து செய்தல் மற்றும் வீட்டுக் கடன் போன்ற முக்கிய காரணங்களுக்காக இந்தத் தொகையை ஊழியர்கள் தாராளமாகப் பெறலாம். மேலும், வேலையில் இருந்து வெளியேறினால் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 2 முறை வரை பணம் எடுக்க இந்த புதிய திட்டம் அனுமதி வழங்குகிறது.
வேலையிழப்பைத் தவிர, மேலே கூறப்பட்டுள்ள மற்ற அனைத்துக் காரணங்களுக்கும் பிஎஃப் உறுப்பினராகச் சேர்ந்து குறைந்தபட்சம் 12 மாதங்கள் முழுமையாக நிறைவடைந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகும். ஒருவேளை வேலையிலிருந்து வெளியேறும் பட்சத்தில், 12 மாதங்கள் முழுமையாகாவிட்டாலும் பணத்தை எடுத்துக் கொள்ளும் சலுகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஊழியர்களின் நிதிச் சுதந்திரத்தை மேலும் அதிகரித்துள்ளன.

