கனடாவின் RBC குளோபல் அசெட் மேனேஜ்மென்ட் இன்க் மற்றும் RBC இன்வெஸ்டர் சர்வீசஸ் டிரஸ்ட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட கூட்டு நடவடிக்கை வழக்கில் 45 மில்லியன் டாலர் சமரசத் தீர்வு எட்டப்பட்டுள்ளது. Siskinds LLP என்ற சட்ட நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்வுக்கான இறுதி ஒப்புதலை ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வழங்கவுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்காத பிஎம்ஓ இன்வெஸ்டர்லைன், டிடி டைரக்ட் இன்வெஸ்டிங் மற்றும் ஆர்பிசி டைரக்ட் இன்வெஸ்டிங் போன்ற இணையவழி தள்ளுபடி தரகர்களுக்கு, டிரெய்லர் கமிஷன் எனப்படும் தரகுக் கட்டணங்கள் வழங்கப்பட்டதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆலோசனை வழங்கப்படாத நிலையில் இக்கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
RBC அல்லது PH&N பரஸ்பர நிதிப் பங்குகளை தள்ளுபடி தரகர்கள் மூலம் வைத்திருக்கும் அல்லது வைத்திருந்த தகுதியுள்ள கனடியர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த இழப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மொத்த சமரசத் தொகையான 45 மில்லியன் டாலரில், 12.6 மில்லியன் டாலர் சட்டக் கட்டணங்கள் மற்றும் வரிகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது. தகுதியுள்ள முதலீட்டாளர்கள் மேலதிக தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

