ஆந்திரபிரதேசத்தை தொடர்ந்து பீகாரிலும் தந்தை மற்றும் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் இரண்டு பேருக்கு இந்நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது தந்தை மற்றும் அவரது 35 வயது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் பதிவாகியுள்ள இந்த தொற்று பரவலை தொடர்ந்து, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வைரஸ் பரவாமல் தடுத்துட தேவையான நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் நிலைமையை மிகவும் நெருக்கமாகக் கண்காணித்து வருவதுடன், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த காலங்களைப் போல பெருந்தொற்று மீண்டும் பரவாமல் இருக்க மருத்துவத்துறையினர் பல்வேறு முற்காப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

