கனடாவில் Capital One வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு 35 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த பெரும் தரவு கசிவு தொடர்பாக தொடரப்பட்ட கூட்டுப் புகார் வழக்கின் அடிப்படையில் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளது.
அமேசான் இணைய சேவைகளின் மேகக்கணி கணினியில் சேமிக்கப்பட்டிருந்த தரவுகளை, அமெரிக்க மென்பொருள் பொறியாளர் பெய்க் தாம்சன் என்பவர் சட்டவிரோதமாக ஊடுருவித் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் 60 லட்சம் கனடா மக்களின் வருமானம், கடன் தகுதி நிலை, வங்கித் தகவல்கள் மற்றும் சுமார் 10 லட்சம் பேரின் சமூக காப்பீட்டு எண்கள் கசிந்தன. குறிப்பாக காஸ்ட்கோ மற்றும் ஹட்சன் பே நிறுவனங்களின் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவோரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நிதி இழப்பைச் சந்தித்தவர்கள் 25,000 டாலர் வரையிலும், நேரம் வீணடிக்கப்பட்டதற்காக 275 டாலர் வரையிலும் விண்ணப்பிக்க முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ விசாரணை 2026 செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் தகுதியுள்ள நபர்கள் இழப்பீட்டைப் பெற முடியும்.

