கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சவாலான மலைப்பாதையில் மலையேற்றம் செய்த பயணிகள் சிலர் ஆபத்தான நிலையில் சிக்கி, பின்னர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபரீதத்திற்கு அவர்கள் கூகுள் மேப்ஸ் செயலியை முழுமையாக நம்பி பயணத்தைத் திட்டமிட்டதே அடிப்படை காரணமாக அமைந்தது.
லயன்ஸ் பே தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் இது குறித்துத் தெரிவிக்கையில், கரடுமுரடான காட்டுப் பாதைகள் மற்றும் மலைப்பகுதிகளுக்குச் செல்லும் போது கூகுள் மேப்ஸ் வழங்கும் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளனர். குறிப்பாக Howe Sound Crest பாதையில் ஏற்பட்ட இந்தத் தவறு குறித்து அவர்கள் ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
கூகுள் மேப்ஸ் செயலியானது சுமார் 18 கிலோமீட்டர் நீளம் கொண்ட, 1,300 மீட்டருக்கும் அதிகமான செங்குத்தான ஏற்ற இறக்கங்கள் மற்றும் பாறைகள் நிறைந்த அந்தப் பாதையைக் கடக்க வெறும் 5 மணி நேரம் 13 நிமிடங்கள் மட்டுமே ஆகும் எனத் தவறாகக் காட்டியுள்ளது. ஆனால் எதார்த்தத்தில் அந்தப் பாதையை முழுமையாகக் கடக்க 12 முதல் 14 மணி நேரம் வரை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பயணக் காலம் குறித்த இத்தகைய தவறான கணிப்புகள் பயணிகளைப் பெரும் இடர்களுக்கு உள்ளாக்குவதாக மீட்புக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர்.

