கனடாவில் விற்பனை செய்யப்படும் ‘Highline’ நிறுவனத்தின் ஆர்கானிக் வெட்டப்பட்ட மினி பெல்லா காளான்களில் ‘லிஸ்டீரியா’ பாக்டீரியா தொற்று பரவியிருக்கக்கூடும் என கனடிய சுகாதாரத் திணைக்களம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, சந்தையில் உள்ள இக்காளான்களை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் காளான்கள் குறிப்பாக அல்பெர்ட்டா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றை வாங்கிய பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் உட்கொள்ளவோ, பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு விற்பனை செய்யவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இவற்றை உடனடியாகக் குப்பையில் வீசுமாறு அல்லது வாங்கிய கடைகளிலேயே மீண்டும் ஒப்படைக்குமாறு சுகாதாரத் துறை கட்டளையிட்டுள்ளது.
லிஸ்டீரியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுகள் பார்ப்பதற்குப் புதியது போலவும், துர்நாற்றம் இல்லாமலும் காணப்படலாம். இருப்பினும், இவற்றை உட்கொள்வது மனிதர்களுக்குக் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். காய்ச்சல், வாந்தி, குமட்டல், தசை வலி மற்றும் கழுத்து விறைப்பு ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாகும். குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு இது பெரும் ஆபத்தை விளைவிக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இது முன்கூட்டிய பிரசவம் அல்லது கருச்சிதைவு போன்ற விபரீதங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கூடுதல் எச்சரிக்கை தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

