நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே வினாக்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு கசிந்துள்ளது. NTA உடன் தொடர்புடைய நிபுணர்கள், பயிற்சி மைய உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இதில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
புனேவில் என்டிஏவின் வேதியியல் நிபுணர் பி.வி. குல்கர்னி இரகசிய காப்புறுதியை மீறி சிறப்பு வகுப்புகளை நடத்தி, தேர்வில் வந்த அதே கேள்விகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்துள்ளார். மாணவர்களின் குறிப்பேடுகளில் உள்ள கேள்விகள் கசிந்த வினாத்தாளோடு சரியாக பொருந்தியுள்ளன. மேலும், மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதும், ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள பயிற்சி மையம் மூலமாகவும் PDF வடிவில் வினாத்தாள் பரப்பப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வினாத்தாள் தயாரிப்பின் போது ஒரே நிபுணரிடம் அனைத்து மாஸ்டர் செட்களும் வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளாலேயே வினாக்கள் வெளியே கசிந்துள்ளன. டெல்லி பல்கலைக்கழக நிபுணர்களின் அறிக்கையின்படி, கசிந்த உயிரியல் கேள்விகள் 90 சதவீதமும், வேதியியல் கேள்விகள் கிட்டத்தட்ட 100 சதவீதமும் உண்மையான வினாத்தாளோடு ஒத்துப்போவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது டெல்லி விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

