ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள கனடா குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு மிக முக்கியமான பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் காட்டுத்தீச் சம்பவங்களே இந்த எச்சரிக்கைக்கு முதன்மையான காரணமாகும்.
பிரான்ஸ் நாட்டில் ஜிரோண்டே, லாண்டேஸ் மற்றும் வார் உள்ளிட்ட தெற்குப் பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருவதால், வனப்பகுதிகளுக்கு அருகில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் மற்றும் பெலோபொன்னீஸ் போன்ற சுற்றுலாத் தலங்களில் கடும் வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாகத் தீ வேகமாகப் பரவி வருகிறது.
ஸ்பெயினின் மாட்ரிட், கேடலோனியா மற்றும் அந்தலூசியா ஆகிய மாகாணங்களில் காட்டுத்தீ காரணமாகச் சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் உள்ளூர் செய்திகளைக் கண்காணிக்குமாறும், அவசர காலங்களில் உதவுவதற்காகத் தூதரகப் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கனடா அரசு வலியுறுத்தியுள்ளது.

